திருப்பூரில், புதிதாக வாங்கிய பைக்கை மறு நாளே அடமானம் வைத்து நண்பர்களுக்கு மது விருந்து வைத்து விட்டு, போதை தலைக்கேறி பாரில் மயங்கி கிடந்த இளைஞரை அவரது தாய் வந்து மீட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது.
மே தினத்தை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு அரசு விடுமுறை அளித்திருந்த நிலையில், திருப்பூர் கோல்டன் நகரில் பழனி என்பவர் நடத்தும் டாஸ்மாக் பாரில் விதியை மீறி மது விற்பனை களைகட்டியது
இந்த பாரில் குடிக்க வந்த இளைஞர் ஒருவர் அதிகளவு மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் அங்கேயே படுத்து விட்டார். விடுமுறையன்று மகனை காணவில்லை என தேடிய தாய், மகன் டாஸ்மாக் பாரில் மது போதை தலைக்கேறிய நிலையில் மயங்கிக்கிடப்பதை கண்டு பதறிப்போனார்
தான் புதிதாக வாங்கிக் கொடுத்த புதிய பைக்கை அடமானம் வைத்து நண்பர்களுக்கு மதுவாங்கிக் கொடுத்த மகன், மூக்கு முட்ட குடித்துவிட்டு இப்படி கிடக்கிறானே என்று கண்ணீர் விட்டு கதறியவாறே ஆத்திரத்தில் அடித்தார்
என்னதான் தவறு செய்தாலும் பெற்றமகன் அல்லவா, அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவன் மீது தண்ணீர் ஊற்றி போதையை தெளிய வைத்தார் அந்த தாய். அதன் பின்னர் மகனிடம் செல்போன் எங்கே என்று கேட்ட போது அது களவு போனது தெரியவந்தது. இதையடுத்து தனது மகனிடம் மது வாங்கிக் குடித்தவர்களையும் ,மதுவிற்றவர்களையும் அந்த பெண் தாறுமாறாக திட்டித்தீர்த்தார்
விடுமுறை நாளன்று எவ்வாறு மது விற்பனை செய்கிறீர்கள் எனவும், எனது மகனை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டீர்களே என பாரில் மது விற்பனை செய்தவர்களிடம் கண்ணீர் மல்க ஆவேசத்துடன் பேச, அந்த போதையிலும் அவர்களை திட்டாதே நான் தான் காரணம் என்றார் அந்த குடிகார மகன்
மதுவால் சீரழிந்த மகனின் நிலை கண்டு தாய் ஒருவர் கண்ணீருடன் ஆதங்கமாக பேசும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.