திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே ரசயானக் கிடங்கில் இருந்து வெளியேறிய நச்சுப் புகையால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், சுகாதார துறை அதிகாரிகள் அங்கு ஆய்வில் ஈடுபட்டனர்.
விளாங்காடுபாக்கத்தில் உள்ள தனியார் கிடங்கில், கழிவறைகளுக்கு பயன்படுத்தக்கூடிய ப்ளீச்சிங் பவுடர், காஸ்டிக் சோடா உள்ளிட்ட இரசாயன பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 25ஆம் தேதி இந்தக் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டு அணைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை முதல் குடோனில் இருந்து வெள்ளை நிற நச்சுப்புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் சூழ்ந்தது. தீ விபத்தால் சேதமடைந்த ரசாயன பொருட்களை ஆழமாக பள்ளம் தோண்டி புதைக்காமல், மேலோட்டமாக புதைத்ததால் நேற்று இரவு பெய்த மழையினால் ரசாயன பொருட்களில் தண்ணீர் கலந்து புகை வெளியேறியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த செங்குன்றம் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் ரசாயன பொருட்களின் மீது எம்.சாண்ட் மண்ணை கொட்டி மூடும் பணிகளில் ஈடுபட்டனர்.