கோவையில் அரங்கேறிய கொலைகள் தொடர்பாக பெங்களூருவில் வைத்து 7 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், கைதுக்கு முன்பாக போலீசாருக்கு பயந்து ஓடிய ரவுடி ஒருவன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
மற்றொரு ரௌடியை சரணடையுமாறு போலீசார் எச்சரிக்கும் ஆடியோவும் வெளியாகியுள்ள நிலையில், காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் ரௌடிகள் கும்பல் தற்போது அச்சத்தில் உறைந்துள்ளது.
கோவை மாநகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரவுடி குப்பல்களுக்கு இடையே நடந்த மோதலில் சத்திய பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டார். அடுத்த நாள் கோவை நீதிமன்றம் அருகே கோகுல் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அடுத்தடுத்த இந்த சம்பவங்களைத் தொடர்ந்து மாநகர போலீசார் ரவுடிகளை கணக்கெடுத்து தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ பதிவு செய்து வருபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி இதுவரை 120க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரவுடி கும்பலைச் சேர்ந்த சிலர் வெளி மாநிலங்களுக்கு சென்று பதுங்கினர். போலீசார் அவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்தனர்.
அதில் பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்களில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள ஏழு பேர் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து பெங்களூரு விரைந்த தனிப்படை போலீசார், கோவையைச் சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கில் தொடர்புடைய சுஜி மோகன்,அமர்நாத், பிரவீன், பிரசாந்த் ஆகியோரை சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் துரத்திச்சென்று கைது செய்தனர்.
போலீசாருக்குப் பயந்து தப்பி ஓடியவர்களில் அமர்நாத், தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளான். போலீசார் பிடித்தால் கை, கால்களை உடைத்து விடுவார்கள் என்ற அச்சத்தில், தாம் சுற்றி வளைக்கப்பட்டுவிட்டதாகவும் தனது கை கால்கள் நன்றாக உள்ளது என்றும் அந்த வீடியோவில் அவன் கூறியுள்ளான்.
இது ஒரு புறம் இருக்க, குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கில் கைதாகி பதுங்கி இருந்த சுஜி மோகனை உடனடியாக சரணடையுமாறு போலீசார் எச்சரிக்கும் ஆடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.
மேலும் பெங்களூரில் உள்ள அறையில் பதுங்கி இருந்த ரவுடிகளின் கூட்டாளிகளான கேரளாவைச் சேர்ந்த அஷ்வின் குமார், கணபதியை சேர்ந்த ராஜேஷ், வடவள்ளி யை சேர்ந்த பிரதீப் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். ஏழு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 55 கிராம் விலை உயர்ந்த மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.
கோவையில் அடுத்தடுத்த கொலைகளுக்குப் பிறகு கோவை மாநகர போலீசார், ரவுடிகளை கணக்கெடுத்து கைது செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரவுடிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது...