4 ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்த பொறியியல் பட்டத்தை வாங்குவதற்குள் மகன் இறந்து விடவே, மகனின் நினைவாக பெற்றோர்கள் விம்மும் நெஞ்சோடும், கலங்கும் கண்களோடும் சென்று பட்டத்தை வாங்கிய நிகழ்வு நாகப்பட்டினத்தில் அரங்கேறி உள்ளது.
உற்சாக கைத்தட்டலோடு பொறியியல் பட்டதாரிகள் பட்டம் பெற்றுக் கொண்டிருக்க மேடைக்கு கீழே விம்மலுடனும், கலங்கிய கண்ணீரோடும், தொண்டையை அடைக்கும் துக்கத்துடன் ஒரு தம்பதியினர் சோகத்துடன் அமர்ந்திருந்தனர். அந்த தம்பதியினரும் பட்டம் வாங்க வந்திருந்தவர்கள் தான், ஆனால், அது இறந்து போன தனது மகனின் பட்டம் என்பது தான் சோகத்தின் உச்சம்.
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்- செல்வி தம்பதியினரின் மகன் தினேஷ். தாங்கள் கஷ்டப்பட்டாலும் மகனை பொறியியல் பட்டதாரியாக்கி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசையில் நாகையில் உள்ள இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்த்து மகனை படிக்க வைத்தனர்.
2021ஆம் ஆண்டு இறுதியாண்டிற்கான அனைத்துத் தேர்வுகளையும் எழுதிய தினேஷ், ரிசல்ட் வரும் வரையில் வீட்டில் சும்மா தானே இருக்க வேண்டும், அதுவரையில் மீன்பிடிக்கச் செல்லலாமென மீனவர்களுடன் சேர்ந்து படகில் கடலுக்குச் சென்றுள்ளார். மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய போது படகு கவிழ்ந்ததில் தினேஷ் உயிரிழந்தார்.
பட்டதாரியாக பார்க்க வேண்டிய மகனை சடலமாக பார்த்த பெற்றோர்களோ மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தனர். இதற்கிடையில், பொறியியல் தேர்வு ரிசல்ட் வெளியானதில் தினேஷ் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிப் பெற்று பொறியியல் பட்டதாரியாக தேர்வாகியிருந்தார்.
இந்நிலையில், கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தினேஷின் பெற்றோர் கண்ணீரோடு கீழே அமர்ந்திருக்க, பட்டம் பெறுவதற்காக தினேஷ் பெயரை மேடையில் வாசிக்கவும் தங்களையும் மீறி வாய் விட்டு கதறிய கண்ணீரோடு மேடையேறினர் செல்வி-கண்ணன் தம்பதியினர். மேடையிலிருந்தவர்கள் அவர்களை தேற்றி பட்டத்தை வழங்கினார்கள். அப்போது, தினேஷிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மற்ற மாணவர்கள் கரகோசம் எழுப்பினர்.
மகன் இல்லாத நிலையில், அவன் படித்து வாங்கிய பட்டத்தை கையில் வாங்கியது அவன் என் கூடவே இருப்பது போல் உள்ளதாக தாய் செல்வி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
ஒவ்வொரு பெற்றோர்களின் கனவும் தங்களது குழந்தைகளைப் பற்றியதாகவே இருக்கும் என்பதற்கு இந்த பெற்றோர்களின் கண்ணீரும் ஒரு சாட்சியே. எனவே, மாணவர்களும் குடும்ப சூழலை உணர்ந்து பொறுப்புடன் நடக்க வேண்டும்.