மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 10 மாத குழந்தையின் தாய் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து ராஜபாளையத்தில் உள்ள நண்பரின் இல்ல விழாவிற்காக ஹானஸ்ட்ராஜ் என்பவர் குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.
மேலூர் அருகே உள்ள முனிக்கோயில் பகுதியில் நான்கு வழிச்சாலையில் பாலம் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருவதால், அருகிலேயே தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் போதிய முன்னெச்சரிக்கை பதாகைகள் இல்லாததால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ஹானஸ்ட்ராஜின் மனைவி பவானி, கார் ஓட்டுனர் பாலாஜி ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஹானஸ்ட்ராஜ், அவரின் 10 மாத குழந்தை மற்றும் பவானியின் தாயார் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.