சென்னை கே.கே நகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வி.சி.க பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட மோதலால் கொடூரக் கொலை அரங்கேறியது தெரியவந்துள்ளது.
சென்னை கே.கே நகர் அம்பேத்கர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வி.சி.க பிரமுகர் தமிழ் முதல்வன் (எ) மண்டகுட்டி ரமேஷ். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த ஏ கேட்டகிரி ரவுடியான ரமேஷ் மீது கோடம்பாக்கம், எம்.கே.பி நகர், எம்.ஜி.ஆர் நகர், கே.கே நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை தனது வீட்டருகே உள்ள டீக்கடையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ரமேஷை, காரில் முகமூடி அணிந்து வந்த கும்பல் ஒன்று, ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இதில், சம்பவ இடத்திலே ரமேஷ் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த எம்.ஜி.ஆர் நகர் காவல் போலீசார், சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து தப்பியோடிய முகமூடி கொலையாளிகளை தேடி வந்தனர்.
கொலை குற்றவாளிகளான எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த ராகேஷ், வால்டாக்ஸ் சாலை பகுதியை சேர்ந்த தனசேகரன் உள்ளிட்ட 6 பேர் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் முன்னிலையில் சரணடைந்தனர். தொடர் விசாரணையில், ரமேஷ் மற்றும் ராகேஷ் ஆகியோர் ஒன்றாக இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். குறிப்பாக பிரச்சனைக்குரிய இடங்களை சுமூகமாக முடித்து கொடுத்து வந்துள்ளனர். பின்னர், பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஓராண்டுக்கு முன்பு இருவரும் பிரிந்து தனித் தனியாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதால் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவந்த நிலையில், மாறிமாறி ஒருவரையொருவர் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக ரமேஷ் வீட்டருகே உள்ள தீபன் தினமும் ரமேஷ் செல்லக்கூடிய இடங்களை நோட்டமிட்டு, கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளார். இதற்கு உறுதுணையாக ராகேஷின் மனைவி ஷோபனா இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட ஷோபனா, தீபன், ராகேஷ், தனசேகரன் உள்ளிட்ட 8 பேரிடமும் எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.