செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 வருடங்களுக்கு மேல் கொத்தடிமைகளாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த 11 சிறுவர்கள், ஆறு பெண்கள் உள்ளிட்ட 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தையூர் ஊராட்சியில் கொத்தடிமைகளாக வேலை செய்து வருபவர்கள் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்ததாக கூறப்படும் நிலையில், திருப்போரூர் வட்டாட்சியர் தலைமையில் சென்ற அதிகாரிகள், அங்கிருந்து 27 பேரை மீட்டனர்.
வியாழக்கிழமை இரவு மீட்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களை கொத்தடிமைகளாக வைத்து வேலையில் ஈடுபடுத்திய கழிப்பட்டூரை சேர்ந்த பாலு என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக இங்கு கொத்தடிமை வேலையில் ஈடுபடுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.