திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே, பெண்களை கிண்டல் செய்த வடமாநில இளைஞரை, அப்பகுதிவாசிகள் சிலர் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தேவிகாபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
அதில், பிரதீப் என்கிற பீகாரைச் சேர்ந்த இளைஞர், அப்பகுதி பெண்கள் சாலையில் செல்லும் போது கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், பிரதீப்பை பிடித்து தர்ம அடி கொடுத்ததில் அவர் நிலைகுலைந்து மயக்கமடைந்ததாக சொல்லப்படுகிறது.
பிரதீப்புடன் தங்கியிருந்த ஆந்திராவைச் சேர்ந்த நபர் தாக்குதலை தட்டிக் கேட்ட நிலையில், அந்த நபரையும் போலீசார் முன்னிலையிலேயே சிலர் தாக்கியதாக, கூறப்படுகின்றது.
காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.