கள்ளக்குறிச்சி அருகே சொந்த வீடு இல்லாமல், நோய்வாய்ப்பட்ட 2 குழந்தைகளுடன் தவிக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீட்டு மனை பட்டா வழங்க ஆட்சியர் உத்தரவிட்டும், கிராம மக்கள் அதை தடுப்பதாக கூறி அந்த பெண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் லட்சுமி நோய்வாய்பட்ட தனது 2 குழந்தைகள் மற்றும் கூலி தொழிலாளியான கணவனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
அந்த வீடு சிதிலமடைந்து மோசமான நிலையில் இருப்பதால் வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் கூறியதால், வாழ வழியின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட லட்சுமி, தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குமாறும், இல்லையேல் தங்களை கருணைக் கொலை செய்துவிடுமாறும் ஆட்சியரிடம் மனு அளித்தார். இதையடுத்து பெண் குடும்பத்தாருக்கு ஊரில் அரசு புறம்போக்கு இடத்தில் வீட்டு மனை பட்டா வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
அக்கிராமத்தில் அரசு புறம்போக்கு காலி இடமே இல்லை என கிராம நிர்வாக அலுவலர் கூறியிருக்கிறார். ஆனால், லட்சுமியும் அவரது கணவரும் ஓரிடத்தில் அரசு இடத்தை கண்டுபிடித்து அங்கு குடியேற கொட்டகை அமைக்க முற்பட்ட போது, சாதியை காரணம் காட்டி, கிராம முக்கியஸ்தர்கள் அதை தடுத்ததாக கூறப்படுவதால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.