காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரான, பாஜக மாநில நிர்வாகி மர்மநபர்களால் நாட்டு வெடிகுண்டு வீசியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், தமிழக பா.ஜ.க பட்டியலின அணி பொருளாளராக பதவி வகித்து வந்தார். நேற்று காலை சென்னை சென்று விட்டு, இரவு வீட்டிற்கு தனது காரில் டிரைவருடன் சென்று கொண்டிருந்தார். பெங்களூரு நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சிக்னல் அருகே வழிமறித்த மர்ம கும்பல், காரின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில், காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது.
இதனால், கொலை வெறிக் கும்பலிடம் இருந்து தப்புவதற்காக, சங்கர் தனது காரில் இருந்து இறங்கி சாலையில் ஓடினார். அவரைப் பின்தொடர்ந்து துரத்திச்சென்ற கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் படுகாயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நசரத்பேட்டை போலீசார் சங்கரின் உடலை கைப்பற்றி, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர். தொழில்போட்டி காரணமா? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தொழில்போட்டி காரணமாக சங்கரின் நண்பரான குமரன் ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்பட்டார். அவரைப் போலவே சங்கரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க வளர்புரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலைகளில் இருந்து இரும்புக் கழிவுகளை பெறுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இதுவரை ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இதுவரை 25-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.