சேலத்தில் வட மாநிலத்தவர் நடத்தும் துணிக்கடைகளில் மாநாட்டிற்கு நிதி கேட்டு திராவிடர் விடுதலைக் கழக தொண்டர்கள் மிரட்டி வாக்குவாதம் செய்ததால், டென்சனான கடை உரிமையாளர் போலீசுக்கு போன் செய்து பாதுகாப்பு கேட்டு கூச்சலிட்ட சம்பவத்தின் வீடியோ காட்சி உள்ளது....
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அருணாச்சல ஆசாரி தெரு பகுதியில் உள்ள வட மாநிலத்தவர்களின் மொத்த வியாபார ஜவுளி கடைகளுக்குள் புகுந்த திராவிட விடுதலைக் கழகத்தினர் தங்கள் கட்சியின் மாநாட்டிற்கு கட்டாயமாக 500 ரூபாய் தர வேண்டுமென வற்புறுத்தியதாக கூறப்படுகின்றது. தற்போது வியாபாரம் சரிவர இல்லை எனக் கூறி 100 ரூபாய் கொடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மரியாதை குறைவாக பேசி மிரட்டுவது ஏன் ? என்று கேட்டு கடையின் உரிமையாளர் எதிர்ப்புக்குரல் எழுப்ப, ஆத்திரமடைந்த திராவிடர் விடுதலைக் கழகத்தினர், தமிழர்கள் மூலம் வியாபாரம் நடத்திக் கொண்டு எங்களுக்கு மாநாட்டுக்கு நிதி தர மறுப்பதா ? என கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடிப்பது போல கடைக்குள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
இதனால் பதற்றமடைந்த துணிக்கடை உரிமையாளர் மகாவீரர் என்பவர் காவல் துறையினரை, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நாங்கள் வாழ்வதா ? இல்லை சாவதா ? என்று கேட்டு கத்தி கூச்சலிட்டார்.
இதையடுத்து திகைத்துப்போன திராவிடர் விடுதலை கழகத்தினர் தங்கள் சகாக்களுடன் அங்கிருந்து நடையைக் கட்டினர்.
அங்கு திரண்ட வட மாநில வியாபாரிகள் அருணாச்சல ஆசாரி தெரு சாலையில் அமர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர், அங்கு வந்த சேலம் நகர காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர்..
இதனிடையே சேலம் மில் ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பாக திராவிட விடுதலைக் கழகத்தை சேர்ந்தவர்கள் மீது பணம் கேட்டு மிரட்டி தாக்க வருவதாக சேலம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்....