சென்னை மணலி புது நகர் பகுதி கவுன்சிலர் பெண்களிடம் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக கேட்ட வீடியோ வைரலான நிலையில் திருமணத்தின் போது பெண் வீட்டார் கொடுத்த பணத்தை மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து வாங்கிக் கொடுப்பதற்காக கேட்டதாக கவுன்சிலர் விளக்கம் அளித்துள்ளார்.
செக் காகவும் வேண்டாம்... அக்கவுண்டலயும் வேண்டாம்.. ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாகத்தான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் இவர் தான் சென்னை மாநகராட்சியின் 16 வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜேந்திரன்..!
சென்னை மணலி புது நகரை சேர்ந்த குணசேகர் என்பவரின் மகன் ஆனந்துக்கும், சடையங்குப்பத்தை சேர்ந்த தனலட்சுமி மகள் திவ்யாவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் இரண்டே மாதங்களில் திவ்யா தாய் வீட்டிற்கு திரும்பிச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் திவ்யாவின் தாய் தனலெட்சுமி , 16 வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் உள்ளிட்ட 15 பேரை அழைத்துச்சென்று மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து சீர்வரிசை பொருட்களை அள்ளிச் சென்றதாக கூறப்படுகின்றது.
மாப்பிள்ளை வீட்டில் உள்ள பெண்களை தனது வீட்டுக்கு அழைத்து பஞ்சாயத்து பேசிய ராஜேந்திரன், வரதட்சனை வழக்கு பதியாமல் சுமூகமாக பிரச்சனையை தீர்த்து விட பெண் வீட்டார் ஒரு லட்சம் ரூபாய் கேட்பதாக கூறி உள்ளார்.
பெண்ணின் பெயரில் காசோலையாகவோ, பெண்ணின் வங்கிக் கணக்கிலோ பணத்தை செலுத்துவதாக கூறிய நிலையில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாகத்தான் வேண்டும் என்று கவுன்சிலர் ராஜேந்திரன் அடம் பிடித்ததாக கூறப்படுகின்றது
ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக கொடுக்க மறுத்த நிலையில், கடந்த மாதம் 18 ந்தேதி மாப்பிள்ளை வீட்டாரை வீட்டுக்கு அழைத்த கவுன்சிலர் ராஜேந்திரன் , அவர்களிடம் இருந்து 5 சவரன் நகையை பறித்துக் கொண்டதாகவும், பெண் வீட்டார் தங்களுக்கு தரவேண்டிய 6 அரை சவரன் நகை குறித்து கேட்ட போது ஆதரவாளர்களை வைத்து மிரட்டி விரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளை வீட்டார் ஆவடி காவல் ஆணையரிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்த விசாரிக்க மாதவரம் பால்பண்ணை உதவி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதி மன்றங்கள் கையாள வேண்டிய விவாகரத்து வழக்கில் கட்ட பஞ்சாயத்து செய்து கவுன்சிலர் நகைபறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணப்பெண் வீட்டார் திருமணத்தின் போது பைக் வாங்குவதற்காக கொடுத்த பணத்தை மாப்பிள்ளை வீட்டாரிடம் திரும்பக் கேட்டதால், தன் மீது நகை பறித்ததாக தவறாக புகார் அளிக்க பட்டுள்ளதாக கவுன்சிலர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.