திருநெல்வேலி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கோடை மழையால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் பால்வளத்துறை அலுவலகத்தில் மழைநீர் புகுந்ததில் அங்கிருந்த கணிப்பொறி மற்றும் ஆவணங்கள் சேதமடைந்தன.
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துவரும் நிலையில், தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
திருநெல்வேலியில் இன்று காலை வழக்கம் போல் வெயில் சுட்டெரித்த நிலையில், பிற்பகல் ஒரு மணி அளவில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.
சுமார் 40 நிமிடம் வரை இடிமின்னலுடன் மழை கொட்டியதில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. மழைநீர் வெளியேற போதுமான வழி இல்லாததால் பால்வளத்துறை அலுவலகத்தில் தேங்கிய மழை நீரை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மோட்டார் மூலம் வெளியேற்றினர்.