திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியில் உள்ள சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை சாட்டையால் அடித்து ராகிங் கொடுமை செய்த வீடியோ வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் உள்ள 10 பாடப்பிரிவுகளில் சுழற்சி முறையில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தக் கல்லூரியில் உள்ள ஆதிராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதியில் தான் இந்த சாட்டை அடி ராகிங் கொடுமை அரங்கேறி உள்ளது
இங்குள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மொத்தம் 40 மாணவர்கள் தங்கி உள்ள நிலையில், சீனியர் மாணவர்கள் தங்களை எஜமானர்களாக நினைத்துக் கொண்டு, முதலாம் ஆண்டு படித்து வரும் ஜூனியர் மாணவர்களை கயிற்றை சாட்டை போல வைத்து கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
தங்கள் துணிகளை துவைத்து கொடுப்பது, கால் அமுக்கி விடுவது உள்ளிட்ட பல்வேறு பணிவிடைகளை செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தும் சீனியர்கள், அதை செய்ய மறுக்கும் மாணவர்களை இரவு முழுவதும் தூங்கவிடாமல் வரிசையாக நிற்க வைத்து சாட்டை அடி கொடுப்பது, சிலாப்பில் தொங்க விடுவது போன்ற தண்டனைகளை வழங்கி ராக்கிங் செய்வதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த ராக்கிங் கொடுமை குறித்து விடுதி வார்டர் ரவியிடம் கேட்ட போது, சீனியர் மாணவர்கள் யாருக்கும் கட்டுப்படுவதில்லை என்றும் இது தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட சீனியர் மாணவர்களை அவர்களது பெற்றோரை அழைத்து வர கூறி இருப்பதாகவும் தெரிவித்தார்.
அனைத்து மாணவர்களும் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காக, அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி தங்குவதற்கு இடம் கொடுத்து கல்லூரியில் படிக்க வைத்திருக்கும் நிலையில், கல்லூரி விடுதியில் படிக்கின்ற மாணவர்களிடம் ஆண்டான் அடிமை என்ற கொடுமையை செய்துவரும் சீனியர் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு ஜூனியர் மாணவர்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
இந்நிலையில், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில், ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்த மூன்றாமாண்டு மாணவர்கள் 8 பேர், ஒரு மாதத்திற்கு கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கல்லூரி முதல்வர் கலைவாணி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.