கன்னியாகுமரியில் இட்லித் தட்டு ஒன்றை கையில் வைத்து விளையாட்டுத்தனமாக சுற்றிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியின் கை விரல், தட்டு துவாரத்துக்குள் சிக்கிக் கொண்டதால், நீண்ட நேரம் போராடி இட்லித் தட்டை வெட்டி சிறுமியின் விரலை காயமின்றி தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
வீறிட்டு அழும் சிறுமியின் குரல் ஒரு பக்கம்.. சிறு காயம் கூட ஏற்பட்டு விடக்கூடாது என்ற பொறுப்பு மறுப்பக்கம்.. விளையாட்டு விபரீதமான சம்பவம் அரங்கேறிய இடம் கன்னியாகுமரி..!
இங்குள்ள லூர்துமாதா தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஆரோக்கிய சேல்வியஸ். இவரது 4 வயது மகளான சிறுமி ஜாபி இட்லித் தட்டை கையில் வைத்து, அந்தத் தட்டின் நடுவில் உள்ள துவாரத்தில் விரலை விட்டு சுற்றி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையின் கை விரல் துவாரத்தில் சிக்கிக் கொண்டதால் பயத்தில் சிறுமி கதறித் துடித்தார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் எவ்வளவோ முயன்றும் சிறுமியின் விரலை இட்லித் தட்டின் துவாரத்திலிருந்து மீட்க முடியவில்லை. இதனால் குழந்தையை கன்னியாகுமரி தீயணைப்பு அலுவலகத்திற்கு தூக்கி வந்து மீட்டு தருமாறு தீயணைப்புத் துறையினரிடம் உதவி கோரினர். மாவட்ட தீயணைப்பு அலுவலரின் அனுமதியுடன் நாகர்கோவிலிலிருந்து அவசரகால மீட்பு ஊர்தி வரவழைக்கப்பட்டது.
இரும்பை வெட்டும் கருவிகள் உதவியுடன் , தீயணைப்பு வீரர்கள் இட்லி தட்டை சிறிது சிறிதாக பொறுமையாக வெட்டினர். அந்த இட்லி தட்டில் இருந்து சிறுமியின் பிஞ்சு விரலை பத்திரமாக மீட்டனர்.
குழந்தையின் பெற்றோர் தீயணைப்புத் துறையினருக்கும் , அவசர கால மீட்பு குழுவினருக்கும் நன்றி தெரிவித்தனர். பெற்றோர்களே, உங்கள் வீட்டில் உள்ள விளையாட்டு பிள்ளைகளின் கையில் இது போன்று சிக்கல்களை ஏற்படுத்தும் பாத்திரங்களை விளையாடக் கொடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டனர்.