தேனி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியரை அத்துமீறி வகுப்பறைக்குள் புகுந்து அடித்து உதைத்து தாக்கிய அப்பள்ளியின் தாளாளர், 25 மாணவர்களுடன் பள்ளியை இழுத்து பூட்டி விட்டு தலைமறைவாகி உள்ளார்.
தேனி திட்டச்சாலையில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளியில், சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் 30 பேர், ஒன்றாம் வகுப்பு முதல் முதல் 5 ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் சென்றாயபெருமாள் என்ற தலைமை ஆசிரியரும், மற்றொரு ஆசிரியையும் பணிபுரிந்து வருகின்றனர்.
அரசு உதவி பெறும் பள்ளி நடத்தி வருவதை மறைத்து அப்பள்ளியின் தாளாளராக உள்ள அன்பழகன், தேனி அல்லிநகரத்தில் செயல்பட்டு வரும் முத்தையா என்ற அரசுப் பள்ளியிலும் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றபோதும், அன்பழகனிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
தன்னைக் குறித்து உயரதிகாரிகளிடம் புகாரளிப்பது, பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியரும், ஆசிரியையும் தான் என நினைத்து அன்பழகன் அவர்களை அடிக்கடி துன்புறுத்தியதுடன், பல மாதங்களாக அவர்களுக்கு சம்பளமும் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தற்போது அரசு மூலம் நேரடியாக சம்பளம் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பள்ளிக்கு வந்த அன்பழகன், தலைமை ஆசிரியர் சென்றாயபெருமாளிடம் தகராறு செய்துடன், மாணவ - மாணவிகள் முன்னே ஆபாசமாக பேசி அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார்.
மேலும், பள்ளியின் அனைத்து வகுப்பறைகள் மற்றும் மெயின் கேட்டையும் பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இதனால் வகுப்பறைகளுக்குள் இருந்த மாணவ, மாணவிகள் அலறத் தொடங்கினர்.
தகவலறிந்து விரைந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தலைமை ஆசிரியர், ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை அறிந்த பள்ளி தாளாளர் அன்பழகன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. போலீசார் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.