தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் டாரஸ் லாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகபாரம் உள்ள கருங்கற்களை ஏற்றிக்கொண்டு, 24 மணி நேரமும் சாலையில் அதிவேகத்தில் சென்ற லாரிகளை படம் பிடித்து, வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் அளித்த செய்தியாளரை, சினிமா வில்லன் போல மர்ம ஆசாமிகள் மிரட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் கடற்கரை ஓரமாக நடைபெற்றுவரும் வேலைகளுக்காக, தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பகுதியில் உள்ள கசவன்குன்று பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் இருந்து, விளாத்திகுளம் வழியாக பாறைக்கற்கள் கேரள பதிவெண் கொண்ட கனரக லாரிகள் மூலம் அளவுக்கதிகமாக எடுத்து செல்லப்படுகின்றன.
குறிப்பாக விளாத்திகுளம் நகர் பகுதியில், பொதுமக்கள் கூட்டம் மிகுந்த பஸ் நிலையம், நீதிமன்றம், காவல் நிலைய வளாகப்பகுதியில் அதிவேகமாக செல்வதால் கற்கள் விழுந்து விபத்து ஏற்பட்டு விடுமோ..? என்று மக்கள் தினந்தோறும் அச்சத்துடன் சாலையில் பயணித்து வருவதாக வேதனை தெரிவித்தனர். இதனை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகாராக தெரிவிப்பதற்காக படம் பிடித்த நமது செய்தியாளரை, ரவுடிகளை வைத்து அவதூறாக பேசி மிரட்டி உள்ளனர்.
இந்த செய்தியை வெளியிட்டால்.. நீ செய்தியாயிடுவ.. என்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு, இந்த ரவுடிகளுக்கு பின்னணியில் அதிகாரபலம் மிக்க சிலர் இருப்பதாக கூறப்படுகின்றது.
கொலை மிரட்டலுக்கு அஞ்சாத நமது செய்தியாளர், போலீசில் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த விளாத்திக்குளம் காவல்நிலைய போலீசார், அந்த டாரஸ் லாரியை அருகிலுள்ள எடை நிலையத்திற்கு எடுத்துச்சென்று எடையை பரிசோதித்தனர். இந்த கனரக டிப்பர் லாரியில் 44 டன் மட்டுமே பாரம் ஏற்ற அனுமதிக்கப்பட்ட நிலையில், 65 டன் எடையுள்ள கற்கள் ஏற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்ற போலீசார், லாரியில் அதிக பாரம் ஏற்றி சென்றதற்காக 15,000 ரூபாய் அபராதம் விதித்தனர். ரவுடிகளை அழைத்து எச்சரித்து அனுப்பினர். இவ்வளவு களேபரம் நடந்தும், சம்பவ இடத்துக்கு வராத வட்டார போக்குவரத்து அலுவலரோ இதுவரை ஒருவர் கூட எழுத்துப்பூர்வ புகார் தராததால் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று வினோத விளக்கம் அளித்தார்.
அதிகாரிகளே அஞ்சும் அளவுக்கு அட்ராசிட்டி செய்யும் ரவுடிகளை ஒடுக்கி, கேரள பதிவெண் கொண்ட லாரியில் அதிகபாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளை பறிமுதல் செய்து, பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.