சட்டமன்றத்தில் 2வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 19ஆம் தேதியன்று அம் மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிலையில், நான்கு மாதங்களுக்குப் பிறகு அதனை ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்தார்.
இதனையடுத்து, நடப்பு சட்டபேரவை கூட்டத்தொடரில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று மீண்டும் மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிலையில், திங்கட்கிழமையன்று ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
அதன் படி, பணம் வைத்து ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடினால் 3 மாதங்கள் வரை சிறை அல்லது 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது அவை இரண்டும் தண்டனையாக விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஓராண்டு வரை சிறை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்க முடியும், சூதாட்டங்களில் தண்டனை பெற்றவர்கள், மீண்டும் தண்டனை பெறும்போது, 3 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறை அல்லது 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது