புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில், நண்பருக்காக பரிந்து பேசிய தனியார் வங்கி ஊழியர் கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேட்டுப்பட்டி பிடாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நேற்றிரவு நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது 2 கிராம இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறின் போது கல்வீசப்பட்டதில் காயமடைந்த ஒடுகம்பட்டியைச் சேர்ந்த முகமது யாசின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யாசினின் நண்பரான, விக்னேஸ்வரன் கல்வீசிய நபர்களை பார்த்து உங்களை சும்மா விடமாட்டேன் என எச்சரித்து விட்டு நண்பர்கள் வீரமணி, அரியராஜ் உடன் டூவீலரில் சென்றதாக கூறப்படுகிறது.
சேமத்துப்பட்டி பிரிவு சாலை அருகே 3 பேரையும் வழிமறித்து சிலர் கம்பியால் தாக்கியதாகவும், இதில், படுகாயமடைந்த விக்னேஸ்வரனை, தாக்கியவர்களே கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது. விக்னேஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் தகவலறிந்த ஒடுகம்பட்டி கிராமத்தினர் அரசு மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
கீரனூர் போலீசார், 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பள்ளத்துப்பட்டியைச் சேர்ந்த ராமலிங்கத்தை கைது செய்தனர். மீதமுள்ளவர்களை உடனடியாக கைது செய்ய கோரி காவல்நிலையத்தை மக்கள் முற்றுகையிட்ட நிலையில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.