சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவியையும் அவரது ஆண் நண்பரையும், பெண் ஒருவர் தனது கூட்டாளிகளை அழைத்து வந்து தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர் மீது தாக்குதல்..
பகுதி நேரமாக பணியாற்றும் நிறுவணத்தில் இருந்து பெற்ற அட்வான்ஸ் தொகையை பள்ளி தோழியின் கூகுள் நம்பரில் செலுத்தி விட்டு திரும்ப கேட்டதால் நடந்த விபரீதம். பள்ளி தோழி தனது ஆண் நண்பர்களோடு வந்து தாக்குதல் நடத்தும் வீடியோ வைரல்.
சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டே காப்பீட்டு நிறுவனத்தில் பகுதி நேரமாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி தன்னுடைய மருத்துவ அவசர தேவைக்காக தனது நிறுவனத்தின் மேலாளரிடம் 3000 ரூபாய் பணம்கேட்டுள்ளார், மேலாளர் ஜிபே மூலம் மாணவிக்கு பணம் அனுப்பிய போது பணம் செல்லவில்லை இதனை அடுத்து மாணவி தனது பள்ளி தோழியான வெண்மணி என்பவரது ஜிபே எண்ணிற்கு பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளார்.
பின்னர் வெண்மணிக்கு போன் செய்த அவர் பணத்தை நேரில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட வெண்மணி மூன்று நாட்களாகியும் பணத்தை தராமல் இருந்துள்ளார், பணத்தைக் கேட்ட போது தொலைப்பேசியில் கல்லூரி மாணவியை ஆபாசமாக திட்டி உள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட வெண்மணி வியாழக்கிழமை மாலை கோடம்பாக்கம் ரயில் நிலையம் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கல்லூரி மாணவி தனது சகோதரி மற்றும் ஆண் நண்பர் அஜய் ஆகியோருடன் கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே சென்றுள்ளார்.
அங்கே வெண்மணி தனது கல்லூரி பெண் நண்பர்கள் மற்றும் ஆண் நண்பர்களுடன் இருந்துள்ளார். இரண்டு தரப்பினருக்கும் பணப் பிரச்சனை தொடர்பாக வாக்குவாதம் எழுந்துள்ளது.
அப்பொழுது வெண்மதியோடு வந்திருந்த ஆண் நண்பர்கள் கல்லூரி மாணவி, அவருடன் வந்த ஆண் நண்பர் அஜய், பணம் கொடுத்த பெண்ணின் சகோதரி ஆகிய மூன்று பேரையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகின்றது.
இதனை அங்கிருந்து பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இரண்டு தரப்பினரையும் தடுத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதில் மூக்குடைந்து காயமடைந்த கல்லூரி மாணவி, கண்ணில் காயம்பட்ட அஜய் ஆகிய இருவரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவி கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் பொது இடத்தில் வைத்து தன்னை மானபங்கபடுத்தியதாக புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் கல்லூரி மாணவி வெண்மணி மற்றும் அவரது நண்பர்களை காவல் நிலையம் அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
வெண்மணி தரப்பில், தங்களை தாக்கிவிட்டதாக 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் வந்து கல்லூரி மாணவி மீதும் புகார் அளித்து சென்றுள்ளனர்.
மூவாயிரம் ரூபாய் பணத்துக்காக மாணவிகள் குழுவாக மோதிக் கொண்டது தொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.