ஒரே போராட்டத்திற்கு வந்த 50 பேரை வைத்து காங்கிரசார் இரண்டு போரட்டங்கள் நடந்ததாக பேனர் வைத்து கணக்கு காட்டிய கூத்து மயிலாடுதுறையில் அரங்கேறி உள்ளது.
ஒரே போராட்டத்துக்கு அலைகடலென 50 பேரைக் கூட்டி வந்து 2 பேனர் பிடித்த பெருமைக்குரிய மயிலாடுதுறை காங்கிரசார் இவர்கள் தான்.
ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாவட்டம், நகரம் வட்டாரம் என்று தனித்தனியே ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டம் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், நகர காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ராகுல் காந்தி பதவி நீக்கத்துக்கு எந்தவகையிலும் சம்பந்தமில்லாத கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 50 காங்கிரசார் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜா நன்றி கூறியதும் வேகமாக ஓடி வந்த சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் ராமகிருஷ்ணன் , ஏற்கனவே பிடித்திருந்த மயிலாடுதுறை தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி என்ற பேனர் மீது மயிலாடுதுறை நகர கமிட்டி என்ற புதிய பேனரை மாற்றிப் பிடிக்கவைத்தார்.
தொடர்ந்து நகர கமிட்டி சார்பில் தனியாக போராட்டம் நடைபெற்றது போன்று செல்போனில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்கு செல்ல வேண்டும் என்பதால் எம்.எல்.ஏ ராஜகுமார் ஒரே போராட்டத்தில் இரண்டு பேனர் வைத்து பங்கேற்றதாக கூறப்பட்டது.
அதே நேரத்தில் ஒரு போராட்டத்துக்கு அழைத்து வந்தவர்களை வைத்து இரண்டு போராட்டம் நடத்திய மாதிரி பில்டப் கொடுத்த எம்.எல்.ஏ ராஜகுமாரின் ராஜதந்திரத்தை கண்டு காவலுக்கு நின்ற போலீசார் மனம் விட்டு சிரித்தனர்.