சென்னையில் மாயமான விமான நிலைய ஊழியரை துண்டு துண்டாக வெட்டி கோவளம் கடற்கரையில் புதைத்ததாக காதல் மனைவி வாக்குமூலம் அளித்த நிலையில், அவருக்கு உதவிய பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர். பூசாரியின் வாக்குமூலத்தால் விமான நிலைய ஊழியரின் உடல் பாகங்களை மீட்பதில் உண்டான சிக்கல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை நங்கநல்லூரில் மாயமான விமான நிலைய ஊழியரான ஜெயந்தன் துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த காதல் மனைவி பாக்கிய லெட்சுமி , கணவர் ஜெயந்தனின் உடல் பாகங்களை கோவளத்தை சேர்ந்த ஆண் நண்பரான பூசாரி வேல்முருகன் மூலம் கோவளம் கடற்கரையில் புதைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்திருந்தார். இதையடுத்து கோவளம் கடற்கரையில் கூறை கொட்டகையில் சிவன் கோவில் நடத்தி வந்த வேல்முருகனை கைது செய்தனர்.
கோவளம் கடற்கரையில் புதைக்கப்பட்ட ஜெயந்தனின் உடல் பாகங்களை தோண்டி எடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பூசாரி வேல்முருகனிடம் புதைத்த இடம் குறித்து போலீசார் விசாரித்தனர். அவரோ டிராலி பேக்கில் எடுத்து வரப்பட்ட உடல்பாகங்களை , உப்பங்களி நிறைந்த புதர் பகுதிக்கு தூக்கிச்சென்று அப்படியே தீவைத்து எரித்து விட்டதாக கூறியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஜெயந்தனின் உடல் பாகங்களை உண்மையிலேயே எரித்தார்களா? அல்லது புதைத்தார்களா? என்பது தெரியாமல் குழம்பிப் போயுள்ளதக கூறப்படுகின்றது
பாக்கிய லெட்சுமியும், வேல் முருகனும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்து வருவதால், இருவரையும் கோவளம் கடற்கரைக்கு அழைத்துச்சென்று நேரடியாக விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.