ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் 12 ஆயிரம் ரூபாயை வட்டியாக கொடுத்து, ஒரு வருடம் முடிவில் அந்த ஒரு லட்சத்தையும் திருப்பி கொடுப்பதாக ஆசைவார்த்தைக் கூறிய ஆருத்ரா, எல்பின், ஐ.எல்.எஃப்.எஸ். ஹிஜாவு மோசடி நிறுவனங்கள் வரிசையில் அரசன், ஏ.ஆர். குரூப்ஸ் போன்ற நிறுவனங்களின் மீதும் முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
ஆருத்ரா... எல்பின், ஐ.எல். எஃப்.எஸ், ஹிஜாவு... அரசன்... இது எல்லாம் முதலீட்டாளர்களுக்கு அல்வா கொடுத்து கோடிகளை வாரிச்சுருட்டிய குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் நிதி நிறுவனங்கள்..!
ஒரே வருடத்தில் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக பெற்றுவிடலாம் என்ற ஆசையில் போட்டிப்போட்டி முதலீடு செய்து, ஆரம்பத்தில் வட்டியாக ஆயிரக்கணக்கில் பணத்தை பெற்றதோடு, தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் முதலீடு என்ற பெயரில் மோசடி குழியில் தள்ளி கமிஷன் பெற்றவர்கள் பலர்.
2000 ஆயிரம் கோடிக்கு அதிகமாக பணத்தை சுருட்டிய ஆருத்ரா, ஐ.எல். எஃப்.எஸ்., ஆயிரம் கோடி ரூபாயை ஆட்டையை போட்டதாக கூறப்படும் எல்ஃபின், ஹிஜாவு நிதி நிறுவன பங்குதாரர்கள் பலர், வெளிநாடுகளில் கொள்ளையடித்த பணத்துடன் சொகுசான தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்
பேராசையில் பணம் போட்டவர்கள் ஒருபக்கம் என்றால், எப்படியாவது சேமிப்பை வைத்தாவது செல்வந்தராகி விட மாட்டோமா என்ற நப்பாசையில் பணம் போட்டு உள்ளதும் போச்சே... என்று தவிக்கும் மக்கள் பலர், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை நோக்கி நடையாய் நடப்பதும் தொடர்கதையாகி வருகிறது..
அந்த வகையில் வில்லிவாக்கத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த அரசன் கேப்பிட்டல் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தின் முகமது மற்றும் அஹமது ஹுசைன் ஷாரிக் ஆகிய இருவரும் சேர்ந்து, வில்லிவாக்கம் மற்றும் வண்டலூர் பகுதிகளில் அலுவலகம் தொடங்கியுள்ளனர். 1 இலட்சம் முதலீடு செய்தால் மாதம் 12 ஆயிரம் வட்டியாக, 1 வருடத்திற்கு பிறகு 1 இலட்சம் திருப்பி தரப்படும் என ஆசைவார்த்தைக்கூறி ஏராளமானோரை ஏமாற்றியதாகவும், பெருங்குடியில் அமேசான் ரெஸ்டாரன்ட் , டிராவல்ஸ் நிறுவனம் மற்றும் அரசன் கோல்டு மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைத்ததும் ஒட்டு மொத்தமாக கம்பி நீட்டியதாக கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் பணம் தருவதாக கூறியவர்கள், செல்போனை சுவிட்ஜ் ஆப் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது.
இதே போல சென்னை முகப்பேரில் இரு இடங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் ஏ.ஆர் மால் என்ற பெயரில் இயங்கி வரும் ஏ.ஆர். குரூப்ஸ் நிதி நிறுவனம், மாதம் 10 சதவீத வட்டி தருவதாக முதலீடாக பணம் பெற்று, தற்போது 2 சதவீதம் மட்டும் வழங்குவதாகவும், பாதிவிலைக்கு தங்கம் தருவதாக ஏமாற்றி வாடிக்கையாளர்களை நகைக்கு கடன் வாங்க வைப்பதாகவும் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரவாயலில் கூவத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதால் மாநகராட்சியால் பாதியில் தடுத்து நிறுத்தப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் தங்களின் ஏ.ஆர் மால் வரப்போவதாக கூறி, முதலீட்டாளர்களை ஏமாற்றிய கூத்தும் அரங்கேறி உள்ளது.
தாங்கள் இதுவரை முதலீட்டாளர்களிடம் 30 கோடி ரூபாய் மட்டுமே பணம் பெற்றுள்ளதாகவும், விரைவில் அவற்றை திருப்பிக் கொடுத்துவிடுவோம் என்றும் ஏ.ஆர் மால் நிர்வாக இயக்குனர் ஆல்வின் தெரிவித்தார். அதே நேரத்தில் மோசடி நிறுவனங்களின் மீது புகார் அளித்துள்ள முதலீட்டாளர்கள், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தங்கள் பணத்தை மீட்டுத்தருவார்கள் என்று இலவு காத்த கிளியாக தவிப்பதாக வேதனை தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வட்டி விகிதத்தை விட கூடுதல் வட்டி தருவதாக கூறி, வலை வீசும் நிதி நிறுவனங்கள் அனைத்துமே ஒரு கட்டத்தில் பணத்துடன் ஓடும் நிறுவனங்கள்தான் என்பதை உணர்ந்து, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மட்டுமே மக்கள் பணத்தை முதலீடு செய்ய காவல் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.