மேட்ரிமோனியல் மூலம் தன்னை சிங்கிள் எனக்கூறி, 80 சவரன் நகைகளை வரதட்சணையாகப் பெற்று தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய துபாய் ரிட்டன் மாப்பிள்ளை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை 4 வதாக திருமணம் செய்து அடைக்கலம் கொடுத்த தலைமை செயலக பெண் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்..
கோட்டு சூட்டெல்லாம் போட்டு மேட்ரிமோனியல் தளத்தில் புகைப்படத்தைப் பதிவிட்டு பெண்களை ஏமாற்றி வந்ததால் சிக்கிய துபாய் மாப்பிள்ளை வினோத்ராஜ்குமார் இவர் தான்..!
கணவரை பிரிந்து வாழ்ந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மேட்ரிமோனியல் மூலம் 2 வது திருமணத்துக்கு மாப்பிள்ளை தேடி யுள்ளனர். அப்போது திருச்சியை சேர்ந்த வினோத்ராஜ்குமார் தன்னை துபாய் மாப்பிள்ளை என்று அறிமுகப்படுதிக் கொண்டுள்ளார். குடும்பத்துடன் வந்து பெண் வீட்டாருடன் பேசிய வினோத்ராஜ்குமார் 80 சவரன் நகைகள், 4 லட்சம் ரூபாய் ரொக்கத்தை வரதட்சணையாகப் பேசி திருமணம் செய்துள்ளனர்.
திருமணமான 20 வது நாளில் துபாய் செல்வதாக கூறிச்சென்றவர், சிலமாதங்கள் கழித்து திரும்பி வந்து தனது மனைவியை நம்ப வைப்பதற்காக துபாய்க்கு அழைத்துச்சென்று, அங்கேயே குடியேறப்போவதாக ஏமாற்றி கூடுதலாக 4 லட்சம் ரூபாய் வரதட்சணை பெற்றதாகக் கூறப்படுகின்றது.
துபாயில் இருந்தபோது ஏராளமான பெண்களுடன் சாட்டிங், வீடியோ கால் என்று வினோத் ராஜ்குமார் செய்த சேட்டையை தட்டிக்கேட்டதால், சில தினங்களில் அந்தப்பெண்ணை ஊரில் கொண்டு வந்து விட்டு சென்றதாகக் கூறப்படுகின்றது. இதற்கிடையே கர்ப்பிணியான அந்தப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், துபாயில் பணிபுரிந்த கம்பெனியில் 80 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்து விட்டு வினோத்ராஜ்குமார் தலைமறைவானதாகக் கூறப்படுகின்றது.
தனது கணவரை தேடிச்சென்ற போது அவர் ஏற்கனவே இரு பெண்களை இதே போல ஏமாற்றி திருமணம் செய்ததும் அவர்களை விவாகரத்து செய்யாமல் தன்னை 3-வதாக திருமணம் செய்ததை அறிந்து அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருச்சியில் உள்ள வினோத்ராஜ்குமாரின் குடும்பத்தினரிடம் கேட்ட போது அவர்கள் மிரட்டி விரட்டியதாக கூறப்படுகின்றது.
நீண்ட நாட்களாக அவரை தேடி வந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கும் தலைமை செயலக பெண் ஊழியரான பாக்கியலட்சுமி என்பவரை 4-வதாக திருமணம் செய்து கொண்டு வினோத்ராஜ்குமார் வசித்து வருவதை கண்டறிந்து அங்கு சென்று விசாரித்த போது பாக்கியலட்சுமி தனது அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி விரட்டியதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து வரதட்சணையாகப் பெற்ற நகை பணம் மற்றும் தங்கையின் திருமண செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி மொத்தம் சுமார் 36 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடியாக பணத்தை பெற்றதாக வினோத் ராஜ்குமார், அவரது குடும்பத்தினர் மற்றும் 4 வது மனைவி பாக்கியலட்சுமி மீது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விரிவான விசாரணை நடத்தி வினோத்ராஜ்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் மோசடிக்கு உடந்தையாக இருந்து மிரட்டியதாக தலைமை செயலக ஊழியர் பாக்கியலெட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர். மேட்ரிமோனியல் மூலம் வரன் தேடுவோர் உஷாராக இல்லாவிட்டால் என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்தச்சம்பவமே சாட்சி..!