கள்ளக்குறிச்சி அருகே தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக, உயிரிழந்த தந்தையின் கால்களுக்கு பாதபூஜை செய்த இளைஞர், இரு வீட்டார் சம்மதத்துடன் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார். ஊரார் வாழ்த்துக்களுடன், வானமும் மழை தூவி வாழ்த்திய சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், வி ஆர் ஏ தொண்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக இருந்தார். இவரது மனைவி அய்யம்மாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். ராஜேந்திரனின் மகன் பிரவீன். பட்டதாரியான இவர் சொர்ணமால்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
தனது மகனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சொர்ணமால்யாவின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோருடன் பேசி திருமணத்துக்கு சம்மதம் பெற்று வந்தார் ராஜேந்திரன். இடையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நாள்தோறும் டயாலிசிஸ் சிகிச்சையும் பெற்று வந்தார். தனது உடல் நிலை மோசமடைவதை உணர்ந்த ராஜேந்திரன் தான் சாவதற்கு முன்பாக மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட முடிவு செய்தார்.
இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் வருகின்ற 27 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் பிரவீனுக்கும் சொர்ணமால்யாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. உடல் நிலை சரியில்லாத நிலையிலும் தனது மகனின் நிகழ்வுக்கு ஊரே திரண்டு வரவேண்டும் என்று வீடு வீடாக சென்று திருமண பத்திரிக்கை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்துபோன தந்தை ராஜேந்திரன் உடலை வீட்டிற்கு எடுத்து வந்த அவரது மகன் பிரவீன், உறவினர்களிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் ஒன்றை வைத்தார்.
தந்தையின் கடைசி ஆசை எனது திருமணத்தை பார்ப்பது தான்... அதற்காகத்தான் அவர் ஆவலோடு இருந்தார், அதற்குள்ளாக இப்படி ஆகி விட்டது. அவர் ஆசீர்வாதத்துடன் அவர் முன்னால் இன்றே எங்கள் திருமணம் நடக்க வேண்டும் அதற்கு உங்கள் எல்லோர் ஒத்துழைப்பும் வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்க, பெண்ணின் பெற்றோரும் சம்மதித்ததால், துக்கவீட்டில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
உற்றார் உறவினர்கள் ஊரார் எல்லாம் கனத்த இதயத்தோடு ராஜேந்திரனின் சடலத்தை சுற்றி நிற்க, தந்தையின் ஆசையை நிறைவேற்ற பட்டு வேட்டி சட்டையுடன் வந்த பிரவீன், படுக்க வைக்கப்பட்டிருந்த தனது தந்தையின் கால்களுக்கு பாதபூஜை செய்து காலில் விழுந்து வணங்கினார்.
ஊரே பூ தூவ தனது காதலிக்கு தாலி கட்டி மாலை மாற்றி மனைவியாக ஏற்றுக் கொண்டார் . அடுத்த நொடியே வானம் பிய்த்துக் கொண்டு கன மழை கொட்டித்தீர்த்தது.
பிரவீனின் இந்த முடிவை வரவேற்ற உறவினர்கள் அவரையும் மணப்பெண்ணையும் உச்சி முகர்ந்து வாழ்த்தினர். உற்றார், உறவினர்கள் மலர் தூவி வாழ்த்துவது போல வானமும் மழை தூவி வாழ்த்துவதாக ஊரார் தெரிவித்தனர்.
தமிழ் சினிமாக்களின் கிளைமேக்ஸ் காட்சியில் மட்டுமே சாத்தியப்படக்கூடிய இப்படிப்பட்ட ஒரு உணர்ச்சிகரமான திருமணத்தை, நிஜத்தில் நடத்தி தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றி இருக்கின்றார் இந்த பாசக்கார மகன்..!