கன்னியாகுமரியில், அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து பாலா இயக்கி வரும் வணங்கான் படத்தில் நடித்த மலையாள நடிகை லிண்டா, தான் தாக்கப்பட்டதாகப் போலீசில் புகார் அளித்துள்ளார். கன்னத்தில் காயத்துடன் நடிகை சிகிச்சைக்கு வந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
பரதேசி என்ற பெயரில் படம் எடுத்த போதே நடிகர் நடிகைகளை கம்பால் வெளுத்தெடுத்த சர்ச்சைக்குள்ளானவர் இயக்குனர் பாலா..!
வணங்கான் படத்துக்காக சூர்யாவை கிலோ மீட்டர் கணக்கில் ஓட வைத்து கொடுமைப்படுத்தியதால், பாலா இயக்கத்தில் படமே வேண்டாம் என்று ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டார் சூர்யா.
இந்த நிலையில் அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து வணங்கான் என்ற பெயரில் பாலா தனது படத்தை தொடர்ந்து வருகின்றார். இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்துவரும் நிலையில் இதில் நடித்த மலையாள நடிகை லிண்டா, கன்னம் வீங்கிய நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.
வழக்கம் போல பாலா வேலையை காட்டிவிட்டார் போல என்று அவரிடம் விசாரித்த போது வேறு ஒரு தகவல் வெளியே வந்தது. வணங்கான் படத்தில் நடிப்பதற்காக தான் உள்பட சில நடிகைகள் படப்பிடிப்பிற்கு சென்றதாகவும், தங்களை நன்றாக பயன்படுத்திக் கொண்டு அழைத்து வந்த துணை நடிகர் ஒருங்கிணைப்பாளர் ஜிதின் என்பவர் கொஞ்சமாக பணம் கொடுத்ததாகவும், மீதம் உள்ள 24 ஆயிரம் ரூபாயை கேட்ட போது அவர் தன்னை கன்னத்தில் அறைந்து தாக்கியதாகவும் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர் இது குறித்து காவல்துறையிலும் லிண்டா புகார் அளித்துள்ளார். நடிகை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வரும் நிலையில் லிண்டா உள்ளிட்ட துணை நடிகைகள் படப்பிடிப்பில் ஒத்துழைக்காமல் பாதியில் சென்று விட்டதாக கூறி ஜிதின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பாலா எந்த நேரத்தில் படத்துக்கு வணங்கான் என்று பெயர் வைத்தாரோ தெரியவில்லை, துணை நடிகை வணங்க மறுத்து போலீசில் புகார் அளித்துள்ளார்.