தமிழகம் மிகச்சிறந்த கலாச்சார மையமாக விளங்குகிறது என்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல வீரர்கள் இந்தியாவுக்குப் பெருமைச் சேர்த்துள்ளனர் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறினார்.
சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
7 ஆயிரத்து 754 மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ள நிலையில், விழாவில் 165 மாணவ, மாணவியர் ஆளுநரிடமிருந்து நேரடியாகப் பட்டங்களைப் பெற்றனர். மீதமுள்ளவர்களுக்கு தபால் மூலம் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
நிகழ்வில் “வணக்கம், எல்லோரும் நல்லா இருக்கீங்களா” என தமிழில் உரையைத் தொடங்கிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், விளையாட்டு வீரர்களால் சமூகத்தில் அனைத்து துறைகளிலும் சிறந்த மனிதராக விளங்க முடியும் என்றும் அவர்கள் சமூக ஒழுக்கத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பார்கள் என்றும் கூறினார்.