கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மெத்தனபோக்கு காரணமாக கரும்பு வெட்டுவது தாமதமாவதால் கரும்புகள் காய்ந்து அவதி அடைவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள் பண்ணாரி அம்மன் சுகர் லிமிடெட் என்னும் சர்க்கரை ஆலை மூலமாக வெட்டப்படுகின்றன.
வெட்டுக்கான அனுமதி வழங்கி இரண்டு மாதங்கள் ஆகியும் இன்று வரை கரும்பை வெட்டாததால் கரும்புகள் காய்ந்து வருவதாகவும், அதேபோல் கரும்பை வெட்டுவதற்கான ஆட்களை தனியார் சர்க்கரை ஆலையே அனுப்பி வைக்கும் நிலையில், தற்போது ஆட்கள் இல்லை எனக் கூறி நீங்களே வெட்டி அனுப்பி வையுங்கள் என ஒருதலைபட்சமாக பேசுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
தனியார் சர்க்கரை ஆலையில் உள்ள பீல்டு அலுவலர்கள் குறிப்பிட்ட சிலரிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு கட்டிங் ஆர்டர் இல்லாமாலும், அடுத்த மாதம் கட்டிங் ஆர்டர் உள்ள கரும்புகளையும் தற்போதே வெட்டி வருவதாகவும் கனகனந்தல் கிராம விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, 800 ரூபாய்க்கு வெட்டிய ஆட்கள் தற்போது ஆட்கள் பற்றாக்குறை காரணத்தை காட்டி 1200 ரூபாய் முதல் 1400 ரூபாய் வரை கேட்பதாகவும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ஆலை நிர்வாகம் 2700 ரூபாய் மட்டுமே வழங்கும் நிலையில், வெட்டுவதற்காக மட்டுமே 1400 வரை கூலி கேட்பதால் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.
தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து, அனைத்து கரும்புகளையும் உடனடியாக வெட்டுவதற்கான வழி வகையை தமிழக அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாக அதிகாரி கூறும் போது, கமிஷன் கேட்கும் அதிகாரி குறித்து பெயர் விவரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.