பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் வரை உயர்த்தக்கோரி தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பாகல்பட்டியில், பால் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்காமல், தனியாருக்கு பால் விநியோகம் செய்தனர்.
பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளுடன் உற்பத்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் தலையிட்டு சமரசம் செய்ததும் 80 லிட்டர் பாலை கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கினர்.
ஈரோடு மாவட்டம் ராயபாளையத்தில் கறவை மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள், பாலை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலும் பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு ஏற்றுமதியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆவின் பால் கொள்முதல் மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.