திருச்சியில் காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 நிர்வாகிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் புதிய இறகு பந்து உள்விளையாட்டு அரங்கை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்த நிலையில், நிகழ்ச்சி அழைப்பிதழில் திருச்சி சிவா பெயர் இடம்பெறவில்லை எனக்கூறி, அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் காரை வழிமறித்து கருப்புக்கொடி காட்டினர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கருப்புக்கொடி காட்டிய 12 பேரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, திருச்சி சிவாவின் வீடு மற்றும் காரை சிலர் சேதப்படுத்தினர்.
இந்நிலையில், கைதான 12 பேரை திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டபோது, அங்கு சென்ற எதிர்தரப்பினர் அவர்களை தாக்கினர். தடுக்க முயன்ற பெண் காவலரின் கையில் காயம் ஏற்பட்டது.
பெண் காவலர் அளித்த புகாரின் பேரில், திமுக நிர்வாகி திருப்பதி கைது செய்யப்பட்டார். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய 4 நிர்வாகிகள் போலீசாரிடம் சரணடைந்தனர்.