தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் தென்காசி புளியரை சோதனைச்சாவடி வழியாக அளவுக்கதிகமாக குண்டுகற்கள் , ஜல்லி கற்கள் மற்றும் எம்.சாண்ட் ஆகியவை ஏற்றிச்செல்லப்படுவதாக புகார் எழுந்த நிலையில் , மாவட்ட எஸ்.பி. தலைமையில் போலீசார் லாரிகளில் இருக்கும் சரக்குகளின் எடையை சரிபார்த்து அபராதம் விதித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம், சுரண்டை, ஊத்துமலை, ஆலங்குளம் வட்டார பகுதிகளில் இருந்து மலைகளை உடைத்து தினமும் நூற்றுக் கணக்கான லாரிகளில் கனிமவளங்கள் கேரள மாநிலத்திற்கு புளியரை சோதனை சாவடி வழியாக ஏற்றிச் செல்லப்படுகின்றது.
தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குண்டுக்கல், ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட், ஆற்றுமணல் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்தும் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிய லாரிகள் போலியான எடைச் சீட்டுகளை தயார் செய்து கனிம வளங்களை கடத்தி செல்வதாக, சமூக நல இயக்கங்கள் குற்றஞ்சாட்டி உள்ளன.
காவல்துறை சோதனை சாவடியில் வரிசையில் நிற்காமல் பைபாஸ் செய்து கடந்து செல்ல வைப்பதற்காக ஏராளமான புரோக்கர்களும் இங்குள்ளனர். முறையான ஆவணங்கள் இல்லாத கேரள லாரி ஓட்டுனர்கள் அத்தகைய புரோக்கர்களின் கால்களில் விழுந்தாவது எளிதாக கடந்து செல்வதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக நெடுஞ்சாலை பணிகள் என்கிற பெயரில் தினமும் அதிக அளவில் கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கடத்தி செல்லப்படுவதாகவும், 28 டன் ஏற்றக்கூடிய லாரியில் 40 டன் வரை கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு மலைப்பாதையில் விபரீத விபத்துக்களையும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தும் வகையில் செல்வதாக கூறப்படுகின்றது
சம்பந்தப்பட்ட வாகனங்களை தடுக்க வேண்டிய தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர்கள், புளியரை மற்றும் செங்கோட்டை காவல் நிலைய அதிகாரிகள் பெயர் அளவுக்கு மட்டுமே அபராத தொகை வசூலிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் புதன்கிழமை காலையில் சுமார் 2 மணி நேரம் இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எல்லை பகுதியில் இருந்து கேரள மாநிலத்திற்கும் , அங்கு இருந்து தமிழகத்திற்கும் மற்ற வாகனங்கள் வர முடியாத சூழலும் ஏற்பட்டது
அதனைத் தொடர்ந்து, மதியம் தென்காசி டிஎஸ்பி நாகசங்கர் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். செங்கோட்டை பிரானூர் பார்டர் பகுதியில் கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை மறித்து அனுமதிச்சீட்டு, எடை அளவு போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
இரண்டு மணி நேரத்தில் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் சோதனை செய்யப்பட்டதில் அதிக அளவு கனிமவளங்களை ஏற்றிக்கொண்டு சட்டவிரோதமாக சென்றதாக 8 லாரிகள் கண்டறியப்பட்டது. லாரிக்கு தலா ரூபாய் 20 ஆயிரம் வீதம் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 550 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமும் போலீசார் இதே போல கடுமையான கண்காணிப்புடன் சோதனை நடத்துவதோடு, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களுக்கு அரசு குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது