திமுக எம்.பி திருச்சி சிவாவின் வீடு மற்றும் காரை சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்திய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.
அதன் திறப்பு விழா அழைப்பிதழ் மற்றும் பேனரில் திருச்சி சிவா பெயர் இடம்பெறவில்லை எனக்கூறி அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் காரை வழிமறித்து கருப்புக் கொடி காட்டினர்.
இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கருப்புக் கொடி காட்டிய 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களை திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், அங்கும் சென்ற எதிர்தரப்பினர் அவர்களை தாக்கினர்.
இதனை தடுக்க முயன்ற போது, பெண் காவலரின் கையில் காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதலில் காயமடைந்த பெண் காவலர் அளித்த புகாரின் பேரில், திமுக நிர்வாகி திருப்பதியை கைது செய்துள்ளனர்.