ஈரோடு பெருந்துறை அருகே படிக்கட்டில் தொங்கிய படி பயணிகளை ஏற்றிச்சென்ற கோகிலா என்ற தனியார் பேருந்தை மறித்து எம்.எல்.ஏ ஒருவர் அக்கறையுடன் எச்சரித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
சம்பவத்தன்று ஈரோட்டில் இருந்து திருப்பூர் நோக்கிச்சென்ற கோகிலா என்ற தனியார் பேருந்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிய, கல்லுரி மாணவர்கள் பலர் ஒற்றைக் கையால் கம்பியை பிடித்துக் கொண்டு ஆபத்தான முறையில் பயணித்தனர்.
இதில் சிலரது கால்கள் சாலையில் உரசியபடி சென்றதால் பதறிப்போன எம்.எல்.ஏ ஜெயக்குமார் தனது காரில் கோகிலா பேருந்தை பின் தொடர்ந்து சென்று சுங்கச்சாவடி பகுதியில் மறித்து நிறுத்தினார்.
பேருந்து ஓட்டுனரை அழைத்து ஏன் இவ்வளவு பயணிகளை ஏற்றிச்செல்கிறீர்கள் ? சிலர் உயிருக்கு ஆபத்தான வகையில் தொங்கிக்கொண்டு வருகிறார்கள் என்று அக்கறையுடன் கேள்வி எழுப்பினார்.
சொன்னா கேட்க மாட்டார்கள் என்று சொன்ன ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் ஒருவர் கீழே விழுந்து பலியானாலும் உங்கள் வாழ்க்கை வீணாகி விடுமே என்று எச்சரித்தார் எம்.எல்.ஏ ஜெயகுமார்
அங்கு தொங்கிய பயணிகளிடம், உங்கள் வீட்டில் உள்ளவர்கள் படியில் தொங்கத்தான் அனுப்பி வைக்கிறார்களா ? என்று கேள்வி எழுப்பினார்.
நாளையும் இதே போல பயணிகளை ஏற்றி வந்தால் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் செய்வேன் என்று எச்சரித்துவிட்டு சென்றார்.