திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு கிராமத்தில், தரமான கட்டிடம் இல்லாததால் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, நூலகம் மற்றும் கிராம சேவை மையக் கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில், புதிய கட்டிடம் கட்டித் தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலாக இந்த அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஆரம்பத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர்.
தற்போது 77 மாணவர்கள் மட்டுமே பயின்று வரும் நிலையில், இப்பள்ளி தாளாரும் தலைமை ஆசிரியருமான முருகன், பள்ளிக்கு வருவதே இல்லை எனக் கூறப்படுகிறது. பள்ளிக் கட்டிடம் பாழடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், கிராம சேவை மையத்தில் வைத்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இது தொடர்பாக பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறும் கிராம மக்கள், மாணவர்கள் நலன் கருதி புதிய கட்டிடம் கட்டித் தர கோரிக்கை விடுத்துள்ளனர்.