கோயம்புத்தூரில், கொலை வழக்கு விசாரணை கைதி நடத்திய துப்பாக்கி சூட்டிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள, போலீசார் துப்பாக்கியால் சுட்டு ரவுடியை பிடித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ரியல் எஸ்டேட் அதிபரும், பாஜக பிரமுகருமான சத்தியபாண்டியன் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சஞ்சய்ராஜா சமீபத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தும்போது, தான் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து தருவதாக சஞ்சய் ராஜா கூறியுள்ளார்.
இதனையடுத்து, அவரை கரட்டுமேடு முருகன்கோயில் பகுதிக்கு அழைத்து சென்ற போது, அங்கு பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த சஞ்சய் ராஜா, பெண் ஆய்வாளர் கிருஷ்ணலீலாவை நோக்கி சுட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டிலிருந்து அவர் தப்பிய நிலையில், அருகில் இருந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தற்காப்புக்காக தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டதில், சஞ்சய் ராஜாவுக்கு இடது காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட கோவை துணை ஆணையர் சந்தீஸ் செய்தியாளரை சந்தித்தார்.