தூத்துக்குடியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஆயிரத்து 500 லிட்டர் கலப்பட பாலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள நிலையில் கலப்பட பால் விநியோகம் செய்பவர்களுக்கு சிறை தண்டனையுடன் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலப்பட பால் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கே.செந்தில்ராஜ் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாதுகாப்பற்ற, தரமற்ற, கலப்படம் செய்யப்பட்ட பாலை விற்பனை செய்வது உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம், 2006ன் கீழ் தண்டனைக்குரியது என்றும், விரைவில் கெட்டுப்போகாமல் இருக்கவும் செயற்கையான அடர்த்தியை கூட்டவும் பாலில் அனுமதிக்கப்படாத ரசாயனங்கள், நிறமிகள், தண்ணீர் கலப்பது சட்டப்படி குற்றமாகும். இதற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் 6 மாத சிறைதண்டனையும் அளிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
தரமற்ற பால் என கண்டறியப்பட்டால் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால் உரிய பிராண்ட் பெயர், பேக்கிங் தேதி உள்ளிட்ட விவரங்களை கொண்டிருக்கவில்லை என்றால் அதற்கு 3 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக பாலில் தண்ணீர், ஸ்டார்ச், சர்க்கரை, மால்டோ டெக்ஸ்டிரின், ((Maltodextrin)) துணிகளை வெளுக்கப் பயன்படும் டிடர்ஜெண்ட் உள்ளிட்டவை கலக்கப்படுகின்றன. இவற்றில் தண்ணீர் மற்றும் ஸ்டார்ச் கலப்படத்தை எளிதில் கண்டறியலாம்.
தண்ணீர் கலக்கப்பட்டிருக்கிறதா ? என்பதை கண்டறிய ஒரு சொட்டு பாலை எடுத்து சாய்வான தளத்தில் விடும்போது, கலப்படமற்ற பாலாக இருந்தால் பால் மெதுவாக கீழே இறங்குவதுடன், வெண்மை நிற கோடு தென்படும். தண்ணீர் கலக்கப்பட்டிருந்தால் வெண்கோடுகள் எதுவுமின்றி உடனடியாக கீழே இறங்கும்.
ஸ்டார்ச் கலப்படத்தை கண்டறிய பாலை கொதிக்க வைத்து கொதிக்கவைத்து, அதிலிருந்து 3 மில்லி எடுத்து, அதனுடன் 5 மில்லி தண்ணீர் கலந்து குளிர்விக்க வேண்டும். பால் நன்றாகக் குளிர்ந்ததும் அதில் சில சொட்டுகள் ஐயோடின் டிங்சர் திரவத்தை சில சொட்டுகள் விட வேண்டும். சுத்தமான பாலாக இருப்பின் அதன் நிறம் மாறாது. மாறாக ஸ்டார்ச் கலக்கப்பட்டிருந்தால் அது ஊதா நிறத்துக்கு மாறும்.
அதேபோல் பாலில் நுரை பொங்க வேண்டும் என்பதற்காகக் கலக்கப்படும் டிடர்ஜெண்ட்டை கண்டறிய வேண்டும் எனில், 10 மில்லி பாலுடன் அதே அளவு தண்ணீர் கலந்து நன்றாகக் குலுக்க வேண்டும். பின் சில நிமிடங்கள் கழித்துப் பார்த்தால் கலப்பட பாலாக இருப்பின் அடர்த்தியான நுரையும் கலப்படமற்ற பாலாக இருப்பின் மெலிதான வெண்படலம் மட்டுமே காணப்படும்.
இதுபோன்ற கலப்பட பாலை அருந்துவதன் மூலம் வயது வித்தியாசமின்றி வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாயு பிரச்சனைகள் ஏற்படும் என்றும் மருத்துவ ஆய்வுகள் கூறுவதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பாக புகாரளிக்க விரும்புவோர், 9444042322 என்ற எண்ணிலும் உணவு பாதுகாப்புத் துறை எண்ணான 8680800900 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.