புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் தமிழகத்தில் தாக்கப்படவில்லை என்றும், சமூக வலைதளங்களில் போலியான தகவல்களை வெளியிடுவதாகவும் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் அதிகாரிகள் சென்னையில் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பொய்யான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக தமிழக காவல்துறை விளக்கம் அளித்தது. பொய்யான வதந்தி பரப்பியதாக தூத்துக்குடி,கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூரில் தலா ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பிரஷாந்த் உம்ராவை பிடிக்க ((திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில்)) 7 பேர் கொண்ட தனிப்படை டெல்லி விரைந்துள்ளது.
இந்நிலையில், பீகார், ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து தலா 4 அரசுப் பிரதிநிதிகள் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை ஆணையரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் பேசிய பீகார் ஐஏஎஸ் அதிகாரி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சிறப்பாகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த குழுவினர் இன்றும், நாளையும் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கு சென்று வட மாநிலத் தொழிலாளர்களிடம் பேச உள்ளனர்.
இதற்கிடையில், வடமாநில தொழிலாளர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்றும், பாதிப்பு ஏற்பட்டால் அருகிலுள்ள காவல் நிலைய உதவி ஆய்வாளரைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் ரயில்நிலையங்களில் பயணிகள் திரண்டுள்ளதால் பாட்னாவுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.