சேலம் தொப்பூர் காட்டு பகுதியில் லாரிகளை நிறுத்தி மதுஅருந்திக் கொண்டிருந்த ஓட்டுனர்களை ஜிபிஎஸ் மூலம் அடையாளம் கண்டு , லாரியின் உரிமையாளர் போலீசில் ஒப்படைத்த நிலையில் போதையில் வாகனம் ஓட்டியதாக அவர்களுக்கு விதிக்கப்பட்ட 22 ஆயிரம் ரூபாயை லாரி உரிமையாளரிடம் வசூலிக்க முயன்றதால் அவர் நீதிமன்றம் முன்பு தர்ணா செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது..
குடிபோதையில் லாரிகளை இயக்கும் ஓட்டுனர்களால் பல்வேறு கோர விபத்துக்கள் தொடர்ந்து வரும் நிலையில் தனது லாரிகளை போதையில் ஓட்டிய இரு ஓட்டுனர்களை, போலீசில் ஒப்படைத்த லாரி உரிமையாளர் கணேஷ் இவர்தான்..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கணேஷுக்கு சொந்தமான இரு லாரிகள் டெல்லியில் இருந்து சரக்குடன் 5 நாட்களில் ஊருக்கு திரும்ப வேண்டிய நிலையில், 11 நாட்களாகியும் வரவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனால் வெறுத்து போன லாரி உரிமையாளர் கணேஷ் தனது லாரியில் பொறுத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ்ஸை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அந்த லாரிகள் இரண்டும் சேலம் மாவட்டம் தொப்பூர் காட்டு இறக்கத்தில் உள்ள ஒயின்ஷாப்புக்கு அருகில் நிறுத்த பட்டிருப்பதை கண்டார்.
முன்னதாக தொப்பூர் காட்டுக்கு மேல் பகுதியில் உள்ள ஒயின் ஷாப்புக்கு அருகிலும் இந்த லாரிகள் நின்று புறப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அங்குள்ள லாரி உரிமையாளர்கள் அசோசியேசனுக்கு தகவல் தெரிவித்து தனது லாரியில் உள்ள இரு ஓட்டுனர்களும் மது அருந்தி உள்ளனர்.
அவர்கள் லாரியை இயக்கினால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்ப்புள்ளதால், இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்து விட்டு, மாற்று ஓட்டுனர்கள் மூலம் லாரியை அனுப்பி வைக்க கூறி உள்ளார். அதன்படி லாரியில் சென்று பார்த்த போது இரு ஓட்டுனர்களும் போதையில் இருந்தது உறுதியானது
இருவரையும் தீவட்டிப்பெட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். விபத்தை தடுக்கும் பொருட்டு தனது ஓட்டுனர்கள் மீது கணேஷ் நடவடிக்கை மேற்கொள்ள சொன்ன நிலையில் போலீசார் நேரில் வந்து புகார் கொடுங்கள் என்று கூறி உள்ளனர்.
கோவில் பட்டியில் இருந்து புறப்பட்டு செவ்வாய்கிழமை பகல் 12 மணிக்கு தீவட்டி பட்டி காவல் நிலையம் சென்று பார்த்த போது இரு போதை ஓட்டுனர்களையும் விடுவித்த போலீசார் அவர்களுக்கு 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருப்பதாகவும் அதனை லாரியின் உரிமையாளரான நீங்கள் செலுத்திவிட்டு லாரிக்கு உரிய ஆவணங்களை வாங்கிச்செல்லுங்கள் என்றும் கணேஷிடம் கூறி உள்ளனர்.
ஓட்டுனர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி போலீசில் ஒப்படைத்த நான் ஏன் அபராதம் செலுத்த வேண்டும் ? என்று காவல் ஆய்வாளரிடம் கேட்க, காவல் ஆய்வாளரோ, பக்கத்துல தான் கோர்ட்டு இருக்கு அங்க போய் கேளு.. என்று ஆவேசமானதாக கூறப்படுகின்றது. இதையடுத்து நீதிமன்ற வாசலில் கணேஷ் தங்கள் சங்க நிர்வாகிகளுடன் தர்ணாவில் அமர்ந்தார்.
அதற்குள்ளாக தகவல் அறிந்த நீதிபதி, லாரி உரிமையாளர்களை அழைத்து பேசி உள்ளார். அவரிடம் நடந்த விவரங்களை புகாராக எழுதிக் கொடுத்த நிலையில் ஓமலூர் டி.எஸ்.பிக்கு தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அபராதம் வசூலிக்காமல் லாரிக்குரிய ஒரிஜினல் ஆவணங்களை கணேஷிடம் ஒப்படைத்த போலீசார், இரு போதை ஓட்டுனர்களையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.