ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் இளைஞர் ஒருவர், தனது திருமணத்தையொட்டி ஜல்லிக்கட்டு காளைகளை வரிசையாக நிறுத்தி கண்காட்சியை நடத்தினார். திருமணம் முடிந்த கையோடு மணமகளுக்கு பீதியை கிளப்பிய பி.வி.எஸ் கருப்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
பி.வி.எஸ் கருப்பு... பிவிஎஸ் கருடன்... பைனான்ஸ் பாலாவின் சண்டியர்... ஏ.எல்.எஸ் தயாவின் புலி.... தளபதி... இவையெல்லாம் அந்த திருமண வீட்டிற்கு வருபவர்களை வரவேற்க வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளைகளின் பெயர்கள்..!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பொன்னடபட்டியை சேர்ந்தவர் பொறியாளர் சரவணன். இவர் தனது திருமண நாளை யொட்டி ஜல்லிக்கட்டு காளைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.. பல்வேறு போட்டிகளில் பரிசுகளை வென்ற காளைகளும், மாடுகள் பூட்டப்பட்ட ரேக்ளா வண்டி , செம்மரி கிடா, வரிசையாக காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் காளைகளுடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு மணப்பெண் சரண்யாவை கண்காட்சிக்கு அழைத்து வந்த மணமகன் சரவணன், தான் வளர்த்து வரும் பி.வி.எஸ் கருப்பு என்ற காளையுடன் ஜோடியாக நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க முயன்றார். மணப்பெண் சரண்யா மூக்கனாங்கயிற்றில் கைவைத்ததால் கருப்பர் கொஞ்சம் முறுக்க மணப்பெண் மெர்சலானார்.
அப்புறம் கருப்பை சமாதனப்படுத்தி மணமக்கள் ஜோடியாக புகைப்படம் எடுத்தாலும் ஒரு வித மிரட்சியுடனே மணப்பெண் காணப்பட்டார்.
அடுத்ததாக கருடன் என்ற பெயரிட்ட காளையுடன் ஜோடியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். காளையை தான் இதுவரை தொட்டதில்லை என்றும் முதல் முறை என்பதால் பயத்துடனேயே அதனை பிடித்திருந்ததாகவும் இனி பழகிக் கொள்வேன் என்று மணமகள் சரண்யா தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை தடுக்கும் விதமாக இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததாகவும், காளைக்கு தங்கள் குடும்பத்தின் இன்சியல் கொடுத்து பிள்ளை போல வளர்த்து வருவதாகவும் சரவணன் தெரிவித்தார்.
பொறியாளராக இருந்தாலும் மண்வாசனையுடன் திருமணத்தை நடத்தியது கிராமத்தினரை வியப்பில் ஆழ்த்தியது.