கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே டிராக்டர் மீது, தனியார் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம் சவுளூர் கிராமத்தை சேர்ந்த 12 பேர் ஆந்திர மாநிலம் வீகோட்டா கிராமத்திற்கு கற்றாழை அறுக்கும் பணிக்காக டிராக்டரில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
எர்ரஅள்ளி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சிவகாசியில் இருந்து பெங்களூர் நோக்கி வேகமாக சென்றுக்கொண்டிருந்த பேருந்து, முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதியுள்ளது. இதில், டிராக்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட முத்து, மல்லி, முனுசாமி, வசந்தி மற்றும் ஒரு 3 மாத குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர். காவேரிப்பட்டினம் போலீசார் விபத்தில் படுகாயமடைந்த 7 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.