கன்னியாகுமரியில் தனியாக நடந்து சென்ற வடமாநில இளைஞரை வலுக்கட்டாயமாக பைக்கில் தூக்கி வைத்து கடத்த முயன்ற சைக்கோ ஆசாமியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ஆம்ளையா இருந்தாலும் உஷாராக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
தனியே நடந்து செல்லும் பெண்களுக்கு தான் பாதுகாப்பில்லை என்று பார்த்தால், ஆம்பள பசங்களுக்கும் பாதுகாப்பில்லை போல.. என்று சொல்ல வைக்கும் வகையிலான சம்பவம் ஒன்று கன்னியாகுமரியில் அரங்கேறி உள்ளது
கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி நான்கு வழி சாலை அருகே உள்ள டாஸ்மாக் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் வட மாநில இளைஞர்களை மர்ம ஆசாமி ஒருவன், இரு சக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் செல்வதாக புகார்கள் வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியில் நடந்து சென்ற வட மாநில இளைஞர் ஒருவரை பார்ப்பதற்கு முரட்டு ஆளாக இருந்த ஒருவன் , மடக்கிப்பி பிடித்து வலுக்கட்டாயமாக தனது பைக்கில் ஏற்றி கடத்த முயற்சித்தான்
அதிர்ச்சி அடைந்த அந்த வட மாநில இளைஞர் கண்ணீர் மல்க தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியதால் அங்கு நின்றிருந்த கார் ஓட்டுனர் இதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அழுது கூச்சலிட்டு அவனிடமிருந்து தப்பித்து ஓட முயன்ற இளைஞரை விடாமல் துரத்திச் சென்ற அந்த மர்ம ஆசாமி , இளைஞரின் சட்டையை பிடித்து வைத்துக் கொண்டான்.
வட மாநில இளைஞரின் சத்தம் கேட்டு அருகில் இருந்த ஓட்டல் காவலாளி சத்தமிட அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் அந்த முரட்டு ஆள் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது. வாகன ஓட்டுனர் எடுத்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் , இளைஞர்களை கடத்திச்செல்லும் முரட்டு ஆசாமி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் மனைவியை பிரிந்து வாழும் அந்த முரட்டு ஆசாமி, அங்குள்ள மதுக்கடையில் மது அருந்தி விட்டு வந்து அங்குள்ள விடுதிகளில் வேலைப்பார்த்து வரும் வட மாநில இளைஞர்களை தூக்கிச்சென்று அத்துமீறலில் ஈடுபட்டுவருவது தெரியவந்துள்ளது. அவனது மிரட்டலுக்கு பயந்து யாரும் புகார் அளிக்காத நிலையில் இரவு நேரங்களில் சாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சைக்கோ போல சுற்றி வரும் அந்த மர்ம ஆசாமியை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.