ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கு இன்னும் 7 நாள்களே உள்ளநிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலையொட்டி, திமுக மற்றும் அதிமுக கூட்டணியினர் மற்றும் பிற கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், மக்களின் நலனுக்காக பாடுபடும் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கோணவாய்க்கால் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெரியார் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, வளர்மதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பிரச்சாரம் செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, நடிகர் ரவி மரியா ஆகியோர் சம்பத் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேமுதிக வேட்பாளர் ஆனந்தினை ஆதரித்து வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வேனில் நின்றவாறு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய பிரேமலதா, திமுக, அதிமுக செய்து முடிக்காத பல்வேறு வாக்குறுதிகளை தேமுதிக ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக செய்து முடிக்கும் என்றார்.