ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட இடையன்காட்டு வலசு, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
பரப்புரையின்போது பேசிய அண்ணாமலை, திருமங்கலம் பார்முலா போல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பார்முலா என்று, இந்திய அரசியல் வரலாற்றில் வந்துவிடக்கூடாது என எச்சரித்த அண்ணாமலை, நல்லவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் வாக்களித்து, சரித்திரத்தை மாற்றியமைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
ஈரோடு கருங்கல்பாளையம், வீரப்பன் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அறத்தின் பக்கம் நிற்கவே, பிரச்சாரத்திற்கு வந்துள்ளதாக கூறினார்.
தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.