நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சலூனில் மகனுக்கு சரியாக முடிவெட்டவில்லை எனக்கூறி, தவறுதலாக வேறொரு சலூன் கடைக்கு பூட்டுப்போட முயற்சித்த காவலரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
திசையன்விளை காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் நேவிஸ் பிரிட்டோவின் மகன் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு சலூனில் முடி வெட்டிக்கொண்டு வீடு திரும்பியுள்ளான்.
சரியாக முடிவெட்டவில்லை என ஆத்திரமடைந்த நேவிஸ் பிரிட்டோ, மகனை உடன் அழைத்துக்கொண்டு, தவறுதலாக வேறொரு சலூன் கடைக்கு சென்று, கடையின் பெயர் பலகையில் இருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு, அவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் கடைக்கு பூட்டு போடவும் முயன்றுள்ளார்.
நேவிஸ் பிரிட்டோவால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் அவரை ஆயுதப்படைக்கு மாற்ற வேண்டும் என சலூன் கடை உரிமையாளர் கிருஷ்ணன் திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.