பள்ளி மாணவர்கள் பங்களிப்பில் உருவான 150 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன், இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்பேஸ் சோன் இந்தியா, டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் செயற்கை கோள் ஏவுதல் திட்டம் சார்பில், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய 150 செயற்கைக்கோள்களுடன், இன்று காலை 8.20 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இஸ்ரோ சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, தெலங்கான ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
65 கிலோ எடை, 3 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் சுமந்து சென்ற செயற்கை கோள்கள் மூலம் காற்றின் தரம், ஓசோன் படலத்தின் தன்மை, கார்பன் அளவு உள்ளிட்ட தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு பயன்படுத்தபடும் என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.