ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து, பால்வளத்துறை அமைச்சர் நாசர் டீக்கடையில் டீ குடித்தும், வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டுக்கொடுத்தும் வாக்கு சேகரித்தார்.
அமைச்சர் கீதா ஜீவன், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டு கேட்டனர்.
இதே போல, அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மூலப்பட்டறை பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் விஜய பிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டனர். பெரியதோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று இருவரும் தேமுதிக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, கட்சியினர் புடை சூழ, வைராபாளையம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.