ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களை கவர போட்டிப்போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை அதிமுகவினர் ஒயிலாட்டம் ஆட்டம் போட்டு வாக்கு சேகரித்த நிலையில், சென்னை திமுகவினர் வீட்டுக்கு வெள்ளையடித்து வாக்கு சேகரித்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்துக்காக திமுக மற்றும் அதிமுகவினர் தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் சென்று, தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அங்குள்ள டவுன் காவல் நிலைய பகுதியில் உள்ள ஜாமி ஆ மஸ்ஜித்தில் தொழுகை முடிந்து வந்தவர்களிடம் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ஆவடி நாசர் ஆகியோர், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.
அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக, அதே இடத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வாக்கு சேகரித்தார்.
ஒரு கட்டத்தில் திமுக - அதிமுக ஆகிய இரு தரப்பினரும் யார் சத்தம் பெரிது ? என்பது போல உரக்க கத்தி, வாக்கு கேட்டதால். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதே போல மற்றொரு பகுதியில், கோவை அதிமுகவின் இளைஞர் பாசறை தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க, ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்தனர்.
சென்னை மாதவரம் பகுதியில் இருந்து சென்றிருந்த புழல் நாராயணன் தலைமையிலான திமுகவினர், ஒரு வீட்டுக்கு வெள்ளையடித்து கொடுத்து கை சின்னத்திற்கு வாக்கு சேரித்தனர்.
தாங்கள் வாக்கு கேட்டு சென்றபோது பெண் ஒருவர் தனியாக வீட்டுக்கு வெள்ளையடித்துக் கொண்டிருந்ததால், அவருக்கு உதவும் பொருட்டு தாங்கள் வெள்ளையடித்துக் கொடுத்ததாக, திமுகவினர் தெரிவித்தனர்.
இந்த இரு கட்சியினரின் தேர்தல் பணிகளுக்கு இடையே சுயேட்சை வேட்பாளர் முத்து பாவா என்பவருக்கு வாக்கு கேட்டு அவரது ஆதரவாளர் ஒருவர், சிங்கிளாக துண்டு பிரசுரம் வழங்கிக்கொண்டிருந்தார்