கரூரில் விளையாட்டுப்போட்டிக்கு சென்ற 4 மாணவிகள் காவிரி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாயனூர் கதவணையை பார்க்க சென்ற மாணவிகளை, பாறைகள் நிறைந்த பகுதிக்கு ஆசிரியர் குளிக்க அழைத்துச்சென்றது ஏன் ? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை அடுத்த செல்லாண்டியம்மன் கோவில் அருகே காவிரி ஆற்றில் பள்ளி மாணவிகள் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர் . அதில் 4 மாணவிகள் ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கி மாயமாகினர். உடனடியாக அவர்களை காப்பாற்றும் அளவுக்கு நீச்சல் தெரிந்த ஒருவர் கூட அங்கு இல்லாததால் கரையில் இருந்த ஆசிரியர் மற்ற மாணவிகள் உதவி கேட்டு கதறி அழுது கூச்சலிட்டனர்.
அப்பகுதி இளைஞர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கி மாயமான மாணவிகளை தீவிரமாக தேடினர். நீரில் மூழ்கிய இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் 4 மாணவிகளும் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களது சடலங்களை பரிசலில் போட்டு மீட்புக்குழுவினர் கரைக்கு கொண்டு வந்தனர். 4 பேரது சடலங்களும் பிணகூறாய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பாதுகாப்பாக அமரவைக்கப்பட்டிருந்த மற்ற மாணவிகள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது
முதற்கட்ட விசாரணையில் பலியான 4 பேரும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த பிளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அரசு நடு நிலைப்பள்ளி மாணவிகள் என்பதும், கரூர் தனியார் கல்லூரியில் நடந்த விளையாட்டுபோட்டியில் பங்கேற்க இரு ஆசிரியர்களுடன் வந்ததும் தெரியவந்தது. கால்பந்து விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தோல்வி அடைந்த நிலையில் 15 மாணவிகளையும் ஆசிரியர் இப்ராகிம் மற்றும் ஆசிரியை ஆகியோர் மாயனூர் கதவணை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவில் துறைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது. அங்கு ஆற்றில் சுழல் இருக்கும், புதை மணல் இருக்கும், ஆழமாக இருக்கும் எச்சரிக்கையுடன் குளிக்கவும் என்று பொதுப்பணித்துறை வைத்திருந்த எச்சரிக்கை பலகையை கண்டு கொள்ளாமல் மாணவிகள் அனைவரையும் அங்குள்ள பாறைப்பகுதிகளை ஒட்டிய ஆற்றில் இறக்கி குளிக்க வைத்த போது தான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மீட்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி என்பது தெரியாமல் காவிரி ஆற்றில் இறங்கி குளித்ததால் வெளிமாவட்டத்தை சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்ததாக தெரிவித்தார். அவர்களது குடும்பத்திற்கு உரிய நிவாரணாம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த பகுதியில் இது போல பலமுறை நடந்திருப்பதாகவும், தற்போது 10 அடி ஆழத்துக்கு தண்ணீர் ஓடுவதால் பெரியவர்கள் எக்காரணத்தை கொண்டும், சிறுவர் சிறுமிகளையோ, நீச்சல் தெரியாதவர்களையோ இந்த பகுதிக்கு குளிக்க அழைத்து வரக்கூடாது என்றும் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதால் தடுப்பு கம்பிகள் அமைத்து இந்த பகுதிக்க மக்கள் செல்வதை நிரந்தராமக் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதே நேரத்தில் இரு ஆசிரியர்களும் எதற்காக மாணவிகளை ஆபத்தான இந்த பகுதிக்கு சின்னஞ்சிறு மாணவிகளி குளிக்க அழைத்துச்சென்றனர் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். இதற்கிடையில், அஜாக்கிரதையாக செயல்பட்ட தலைமையாசிரியர் பொட்டுமணி, இடைநிலை ஆசிரியர் இப்ராஹிம், ஆசிரியர் திலகவதி ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.