மதுராந்தகம் அருகே மது அருந்திய இருவர் மர்மமான முறையில் பலியான நிலையில், ரகசிய காதலுக்கு இடையூறாக உள்ள கணவனை கொலை செய்ய மதுவில் ஊசி மூலம் விஷத்தை ஏற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்..
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நடராஜபுரத்தை சேர்ந்தவர் சுகுமார் , இவர் கோழிஇறைச்சி கடையில் வேலைப்பார்த்து வந்தார்.
மனைவி கவிதா தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று கறிக்கடைக்கு வேலைக்கு சென்ற சுகுமார் வீட்டில் இருந்தே குவாட்டர் மதுப்பாட்டில் ஒன்றை எடுத்து சென்றதாக கூறப்படுகின்றது.
மதியம் சாப்பிடுவதற்கு முன்பாக அவர் அந்த மதுவை அருந்திய போது அருகில் இருந்த கூட்டாளியான பீகார் மாநிலத்தை சேர்ந்த ஹரிலால் என்பவரும் பங்கு கேட்க, அவருக்கும் ஊற்றி கொடுத்துள்ளார்.
இருவரும் ஆளுக்கு ஒரு கட்டிங் மதுவை குடித்த நிலையில் வயிற்றில் ஏற்பட்ட கோளாறால் அவதிக்குள்ளாயினர். சுகுமார் வீட்டுக்கு புறப்பட்டு சென்ற நிலையில் ஹரிலால் அங்கேயே சுருண்டு விழுந்து பலியானார்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுகுமார் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். மது அருந்திய இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் போலீசாருக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்த மதுப்பானம் எந்த கடையில் வாங்கப்பட்டது என்று போலீசார் விசாரித்த போது. சம்பவத்தன்று சுகுமாருக்கு மதுவாங்கி குடிக்க கொடுத்ததே அவரது மனைவி தான் என்பது தெரியவந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில் திருட்டு காதலுக்கு தடையாக இருந்த கணவனுக்கு மனைவி விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கவிதாவிற்கும் அங்கு பணிபுரியும் ஒருவருக்கும் திருட்டு காதல் இருந்து வந்துள்ளது. இதை அறிந்த சுகுமார் மனைவி கவிதாவை பலமுறை கண்டித்துள்ளார்.
இருவருக்கும் சண்டை ஏற்பட்டு சில நாட்கள் பிரிந்தும் இருந்துள்ளனர். இந்த நிலையில் தனது காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை தீர்த்துக் கட்ட திட்டமிட்டுள்ளார். அதன்படி ஞாயிற்றுக்கிழமை சுகுமாரின் அண்ணனான மணி என்பவரிடம் 400 ரூபாய் பணம் கொடுத்து இரண்டு மது பாட்டில்களை வாங்கி வர சொன்னதாகவும், அதில் ஒரு பாட்டிலை மணியிடம் கொடுத்துவிட்டு ஒரு பாட்டில் மட்டும் கவிதா எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது
தனது கையில் இருந்த மது பாட்டிலின் மூடியை மட்டும் நைசாக கழற்றி சிரஞ்சி மூலம் மதுவில் விஷம் கலந்த கவிதா, அதனை யாரோ கொடுத்துச்சென்றதாக கூறி ஞாயிற்றுக்கிழமை தன் கணவருக்கு குடிக்க கொடுத்துள்ளார். ஏற்கனவே மூக்கு முட்ட குடித்திருந்த சுகுமார் நாளை குடிக்கலாம் என்று வீட்டில் எடுத்து வைத்துள்ளார்.
மறுநாள் திங்கட்கிழமை காலையில் அவர் வேலைக்கு செல்லும் பொழுது விஷம் கலந்த மதுபாட்டிலை கையோடு எடுத்துச் சென்று அருந்திய போது அவரும், ஓசி மதுவுக்கு ஆசைப்பட்ட ஹரிலாலும் பலியானது தெரியவந்தது.
இதையடுத்து கவிதாவை கைது செய்த போலீசார், இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் அவரது திருட்டு காதலனுக்கு தொடர்பு உண்டா ? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.காதலுக்கு கண்ணில்லை என்றால் திருட்டு காதலுக்கு இதயமுமில்லை, இரக்கமுமில்லை என்பதற்கு இந்த சம்பவமே சான்று..!