இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஷேர் ஆட்டோ மீது காட்டுப்பன்றி மோதியதால், ஆட்டோ தூக்கி வீசப்பட்டு ஒட்டுனர் பலியான நிலையில் 13 மாணவ மாணவிகள் காயம் அடைந்தனர். கிராமப்புறங்களில் பள்ளி நேரங்களில் அரசு பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் நிகழும் விபத்துக்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முத்துப்பட்டியை சேர்ந்தவர் நல்ல மருது. இவர் தனது கிராமம் மட்டுமல்லாமல், பெருமாள் தேவன் பட்டி, மூலக்கரைப்பட்டி, வடுகபட்டி, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் 13 பேரை தனது ஷேர் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு கமுதிக்கு சென்றார்.
பெருமாள்தேவன் பட்டி அருகே ஆட்டோ வந்த போது திடீரென சாலையின் குறுக்கே வந்த காட்டுப்பன்றி ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. சம்பவ இடத்திலேயே ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து சாலையோர பள்ளத்தில் விழுந்தது
இதில் பலத்த காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் நல்ல மருது மற்றும் மாணவ மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி ஓட்டுனர் நல்ல மருது பரிதாபமாக பலியானார்.
மூன்று மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாணவர்களின் பெற்றோரும் பலியான ஓட்டுனரின் உறவினர்களும் மருத்துவமனையில் கதறி அழுதனர்.
இந்த விபத்து குறித்தும், அளவுக்கதிகமான மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்றது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு போக்குவரத்து பணிமனையை பொறுத்தவரை காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்காக 6 நகரப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், சாயல்குடி, பெருநாழி ,வீரசோழன் , முதுகுளத்தூர் , கீழ்குடி , பரமக்குடி ஆகிய ஊர்களுக்கு மட்டுமே அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், அங்குள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டுமே அரசு பேருந்தால் பயன் பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
கமுதி சுற்றுவட்டார பகுதிகளில் 280 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து நாள்தோறும் பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கமுதிக்கு வந்து செல்கின்றனர்.
காலை மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல போதிய அளவு அரசு பேருந்து இயக்கப்படாததால் பேருந்துகளின் மேற்கூரைகளிலும், சரக்கு வாகனங்கள், ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக மாணவர்கள் பாதுகாப்பற்று பயணித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ள மக்கள், இதனால் அவ்வப்பொழுது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்வதால் மாணவர்களின் நலன் கருதி அரசு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்